#100நாடுகள்100சினிமா #36. SWITZERLAND - SISTER (2012)

6:44:00 AM

Ursula Meier | Switzerland | 2012 | 93 min.


(*** English write-up & Download Link given below ***)

12 வயதுச் சிறுவன் Simon. மலை பேல் இருக்கும் ஆடம்பரமான ஒரு சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட் (Swiss Ski Resort) தான் அவனது வேலையிடம். அந்த ரிசார்ட்டிற்கு வரும் டூருஸ்ட்களது பணம், தின்பண்டம், கண்ணாடி கையுறை ஜாக்கெட் போன்ற பனிச்சறுக்கு உபகரணங்கள், முக்கியமாக பனிச்சறுக்கு செய்யும் பலகை (Ski board) போன்றவற்றை திருடிக்கொண்டு வந்து அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர்களுக்கு கம்மியான விலைக்கு விற்று பணம் பண்ணுகிறான். சைமனுக்கு பெற்றோர் இல்லை. ஒரு அக்கா மட்டும் தான். பெயர் Louise. இவனை விட அதிக வயது மூத்தவள். நிரந்தர வேலை கிடையாது. குடி பழக்கம் உண்டு. பல ஆண் நண்பர்களுடன் நாட்கணக்கில் சுற்றித்திரிபவள். இவளுக்கும் சேர்த்து சைமன் தான் சம்பாதித்துவருகிறான். இருவரும் அந்தப் பணக்காரச் சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்கள். இருவருக்கும் தங்களது வாழ்வுநிலை எப்படியாவது உயர்ந்துவிடாதா என்ற ஏக்கம் இருக்கிறது. சிறுவனான சைமனுக்கு லூயிஸை விட்டால் வேறு யாருமில்லை. லூயிஸிற்கு சைமன் தான் பிரச்சனையே. அவன் இல்லையென்றால் என்றோ யாருடனாவது தான் 'செட்டில்' ஆகியிருக்கக்கூடும் என்று நம்புகிறாள்..

பெருநகரங்கள் எதை எடுத்துக்கொண்டாலும், அதில் இருவேறு விதமான மனிதர்களைப் பார்க்கலாம். வானுயர அப்பார்ட்மெண்ட்கள் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் அதே ஏரியாவின் ஒரு மூலையில், புற்றீசல்களைப் போல ஒன்றோடொன்று ஒட்டிய வீடுகளைக் கொண்ட ஒரு சேரியும் இருக்கும். இங்கும் அதே தான். மேலே பனிசூழ்ந்த மலை உச்சியில் பணக்காரர்கள் பொழுதுபோக்க வரும் ஆடம்பர ரிசார்ட். கீழே சைமன்-லூயிஸ் போன்றவர்கள் வசிக்கும் குறுகிய அப்பார்ட்மெண்ட்கள். இரண்டையும் இணைத்து ஓடுகின்டிராம் வண்டிகள். தினம் டிராமில் ஏறி உச்சிக்குச் சென்று டூரிஸ்ட்களது பைகளில், ஜாக்கெட்களில், லாக்கர்களில் வைத்திருக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் நழுவுகிறான் சைமன். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த, யாரும் யாரையும் கண்டுகொள்ளாத அந்தக் கூட்டத்தில் சிறுவனான சைமனால் சுலபமாகக் கலந்துகொள்ள முடிகிறது. அவனை அங்கு கவனிக்க யாரும் இல்லை. சைமன் வரும் காட்சிகளில் எல்லாம் அவன் உயரத்திற்கே 'ஷாட்' வைக்கப்பட்டிருப்பதால், கூட்டத்திற்கிடையில் அவன் நகர்வதையும், தனக்கு வேண்டுமென்பதை எடுத்துக்கொண்டு காணாமல் போவதையும் நாம் மட்டுமே பார்க்கிறோம். மற்றவர் அனைவருமே நம் பார்வைக்கு 'மேலே' அவரவரவர் வேலையைப் பார்த்தபடி நகர்ந்துகொண்டிருக்கின்றனர்.

படத்தின் ஒளிப்பதிவாளர் Agnès Godard. பனி சூழ்ந்த சுவிஸ் மலை ரிசாட்டையும், டிராம் காட்சிகளையும், கீழே சமவெளியில் சைமன்-லூயிஸ் வீடு அமைந்துள்ள பகுதிகளையும் மிக அருமையாகப் படம்பிடித்துள்ளார். பீக் சீசன் டைமில் ஊட்டி, கொடைக்கானல் சென்று பார்த்திருக்கிறீர்களா? குளிருடன், கூட்டம் கூட்டமாக டூரிஸ்ட்களும், சத்தமும், சகதியுமான இடங்களில் வெந்து வேகாத சாப்பாடும், காத்திருப்பும், கொள்ளையடிக்கும் வியாபாரிகளுமாக ஏன்டா இங்கு வந்தோம் என்று ஆக்கிவிடுவார்கள். அப்படியொரு அனுபவத்தைக் கொடுத்தது இந்தப் படம். ஒரு சுவிஸ் ரிசார்ட்டை (கையில் சல்லிக்காசில்லாமல்) பல நாள் சுற்றி வந்த உணர்வு, வெறுமை. 'புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது' என்று அந்த இடத்தின் அழகியலை ஒளிப்பதிவில் முன்னிறுத்தாமல், சைமனின் பார்வையில் நகர்த்தியிருப்பதே இந்த உணர்விற்கு காரணம்.     

Simon ஆக Kacey Mottet Klein என்பவர் நடித்துள்ளார். திருடுவதும், திருடிய பொருட்களைக் கூவி கூவி விற்பதும், அக்காவிற்கு பணம் கொடுப்பதும், ஜீன்ஸ் வாங்கிக்கொடுத்து அவளை மகிழ்விப்பதுமாக சிறுவயதிலேயே பெரியவன் ஆன கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கடைசி 10 நிமிடங்கள் வசனமே இல்லாமல் சீசன் முடியும் காலகட்டத்தில் ரிசார்ட்டைச் சுற்றி வரும் சைமனது காட்சிகள் படத்திற்கு அருமையானதொரு நிறைவைக் கொடுத்தது. அக்கா Louise ஆக Léa Seydoux. இளவயதிலேயே அனைத்தையும் தொலைத்த, இழப்பதற்கு ஏதுமில்லாத ஒரு ஒரு பெண்ணாக, பல சமயங்களில் நடைபிணமாக சிறப்பாக நடித்துள்ளார். நான் இந்தப் படத்தைப் தேர்தெடுத்ததற்குக்காரணமே இவர் தான். 'Blue is the Warmest Color (2013)' Emma அல்லவா இவர்

பெர்லின் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்குபெற்று விருதுகளையும், பாராட்டுக்களையும் வாங்கியுள்ள இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் Ursula Meier. பெண். இயக்குனராக இரண்டாவது படம். அக்கா-தம்பிக்கு இடையேயான உறவு, அதிலிருக்கும் சிக்கல்கள், அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. கதை என்று திடமாகச் சொல்ல எதுவும் இல்லை. முதல் பாதியில் சைமனையும், லூசியையும், அவர்களது செய்கைகளையும் பார்க்கும் நாம், இரண்டாம் பாதியில் அவர்களைப் பற்றி முழுதாகத் தெரிந்துகொள்கிறோம். தனது பிள்ளைகளுடன் விடுமுறைக்கு அங்கு வந்துள்ள ஆங்கிலேயப் பெண்மணி கதாப்பாத்திரம் ஒன்று உண்டு. சைமனுக்கும் அவருக்குமான காட்சிகள் படத்தின் கருவை மொத்தமாகச் சொல்லிவிட்டு நகர்கிறது.

இரண்டு விளிம்பு நிலை உடன்பிறப்புகளின் கதை. 'SISTER' அருமையான தலைப்பு. படம் பார்த்தால் புரியும்.

பார்க்க வேண்டிய படம்.

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

**********************************

12-year-old Simon lives with his older sister Louise in a housing complex below a luxury Swiss Ski Resort. Louise is an irresponsible, troubled, drinks too much and never stays in a job. Simon is the family's bread-winner. He steals food, money, ski gear and ski board from the rich tourists and sell them for a cheaper price in the plains. 'Sister' is their story.

Dir. Ursula Meier
Directed by Ursula Meier, the first half shows us what the siblings do and only in the second half we get to know them. Their relationship is complex, their love towards each other is complex and so is their lifestyle. The Up's and Down's of the society is portrayed in the landscape itself where a 'Tram' ride bridges the luxury Resort and the Dark, Under-developed housing community where Simon and his sister lives.

Cinematography by Agnès Godard is a major plus point to the film focussing more on Simon and his POV rather than focussing on the posh-filled with riches- high priced tourist resort. The camera is always placed to Simon's height which makes us, us alone see the petty thieving that Simon does which no one around cares to witness.

Kacey Mottet Klein plays Simon the protoganist of the film and the bread winner (stealer) of the family . Léa Seydoux of 'Blue is the Warmest Color (2013)' fame plays Louise, a completly lost fit for nothing sister, which she does with ease.

SISTER - the tile itself a wonder, is definitely worth your time. Do watch.


         

Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...