#100நாடுகள்100சினிமா #WW2Cinema #24. HUNGARY SON OF SAUL (2015)

7:54:00 AM


Laszlo Nemes | Hungary | 2015 | 107 min.

(*** English Write-up & Download Link given below ***)

Sonderkommando - ஹிட்லரது நாஜிப்படை அதிகாரிகளால் யூதர்களும், போர்க்கைதிகளும், நாஜி எதிர்ப்பாளர்களும், கிளர்ச்சியாளர்களும் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர். இது தெரிந்த செய்தி. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், ஒரு 'வேலையாக' இது எவ்வளவு பெரிய செயல் என்பது புரியும். எதிரிகளை தேடிக்கண்டுபிடித்து, கணக்கெடுத்து ரயில்களில் ஏற்றி சித்திரவதைக் கூடங்களுக்கு (Concentration Camps) அனுப்பி, அங்கு விதவிதமாக அவர்களைக் கொன்று, இறந்தவர் உடல்களை அப்புறப்படுத்தி, அவர்களது உடைமைகளிலிருந்து விலைபோகக்கூடியப் பொருட்களைப் பிரித்து அப்புறப்படுத்தி, அடுத்த 'பேட்ச்' சிற்கு கூடத்தைக் கழுவி சுத்தப்படுத்தி தயார் செய்து... இதையெல்லாம் ஜெர்மன் அதிகாரிகளே செய்திருக்க வாய்ப்பே இல்லை. இவர்களுக்கென்று வேலை செய்ய ஒரு குழு இருந்தது. அவர்கள் Sonderkommando என்றழைக்கப்பட்டார்கள்

கைது செய்து வரப்பட்டவர்களில் கொஞ்சம் ஸ்ட்ராங் ஆசாமிகள் மட்டும் உடனடியாகக் கொல்லப்படாமல் இந்த வேலைகளைச் செய்வதற்காக ஒதுக்கப்பட்டார்கள். இவர்களது சட்டைகளின் பின்னால் சிவப்புமையில் க்ராஸ் (X) போடப்பட்டிருக்கும். அது தான் அடையாளம். இவர்களும் எந்நேரமும் இவர்களும் கொல்லப்படலாம். ஆனால் அதுவரை தங்களது சொந்த குடும்பத்தினர், இனத்தவர், நாட்டவர் என்று எவர் கொண்டுவரப்பட்டாலும் அவர்களை எரித்தும், புதைத்தும், கரைத்தும் வந்தார்கள். இந்த Sonderkommando எவ்வளவு மன வேதனையையும், அழுத்தத்தையும் அடைந்திருப்பார்கள் என்பதை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இதயம் உறைந்து நடமாடும் பிணங்களாக, இயந்திரத்தனமாக நாஜி வெறியர்களின் கொலைபாதகச் செயல்களை செய்துவிட்டு செத்து மடிந்திருக்கிறார்கள். ஹங்கேரிய யூதர்களில் இருந்து மட்டும் சுமார் 900 பேர் Sonderkommando வாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. நேசப்படைகளால் போரின் கடைசி நாட்களுல் விடுவிக்கப்பட்ட, தப்பிப்பிழைத்த Sonderkommando க்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கும் 'The Scrolls of Auschwitz' என்ற புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் ஹங்கேரி நாட்டுத் திரைப்படம் தான் இந்த Son of Saul.

மொத்தக்கதையும் போலாந்திலுள்ள அமைந்திருந்த Auschwitz என்ற பிரபல சித்திரவதைக் கூடத்தினுள் நடக்கிறது. ஆண்டு 1944. புதிதாக வந்த 'பேட்ச்' விஷவாயு வைத்துக் கொல்லப்படுகிறார்கள். அனைவரும் இறந்துவிட ஒரே ஒரு சிறுவனது உயிர் மட்டும் பிரியாமல் ஊசலாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார் ஒரு ஜெர்மன் டாக்டர். அவனைத் தன் கையாலேயே மூச்சடைக்கவைத்துக் கொன்று விட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிடுகிறார். ஹங்கேரிய யூதனான Saul அங்கு Sonderkommando வாக வேலை செய்து வருகிறான். டாக்டர் செய்யும் இந்தச் செயலைப் பார்க்கிறான். தினம் அங்கு வந்து சாகும் மக்களின் உடைமைகளைப் பரிசோதித்து அதில் உள்ள பொருட்களை தரம்பிரிப்பது, விஷவாயுக்கூடத்திலிருந்து உடல்களை இழுத்து வந்து எரியூட்ட எடுத்துச் செல்வது, எரிந்த உடல்களின் சாம்பல்களை ஏரிக்கு கொண்டு போய் கரைப்பது அல்லது புதைப்பது, கூடத்தை தண்ணீர் ஊற்றி அழுந்தத்தேய்த்து சுத்தப்படுத்துவது என்று தினம் ஒரே ரொட்டீனாக செய்து வருபவன். மருந்திற்கும் அவனது முகத்தில் சிரிப்பில்லை. கண்களில் உயிர் இல்லை. அப்படிப்பட்டவனுக்கு டாக்டரால் கொல்லப்பட்ட அந்த சிறுவனை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது. அந்தச் சிறுவன் தனது மகன் என்று Saul நம்புகிறான். அவனுக்கு ஒரு ரப்பி (Rabbi - யூத குரு) மூலம் இறுதிச் சடங்குகள் செய்து முறையாக புதைக்க வேண்டும் என்று நினைக்கிறான். Saul நினைத்ததைச் செய்ய முடிந்ததா, இல்லையா என்பது தான் இந்தப் படம்.

நாஜிக்கள் தங்களது எதிரிகளைக் கொல்ல ஐரோப்பா முழுவதும் பல இடங்களில் சித்திரவதைக்கூடங்களைக் கட்டிவைத்திருந்தார்கள். அதில் போலாந்தின் Auschwitz மிக முக்கியமான ஒன்று இரண்டாம் உலகப்போர் சமயம் கொல்லப்பட்டவர்களில் பாதிக்கு பாதி பேர் இங்கு தான் தங்களது உயிரை விட்டார்கள். அந்த Auschwitz கூடத்தை இந்தப் படத்தில் நம் கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள். இப்பொழுது வரும் படங்கள் போல Widescreen இல்லாமல் 40mm லென்ஸ் கொண்டு சதுரமாக Portrait வடிவில் படமெடுத்திருக்கிறார்கள். இயக்குனருக்கு இணையாகப் பாராட்டப் படவேண்டியவர் படத்தின் ஒளிப்பதிவாளர் Matyas Erdely.

ஷாட்கள் அனைத்துமே க்ளோஸப்பில் நடிகர்கள் (பெரும்பாலும் Saul) பின்னால் தொடர்ந்து சென்று அவர்கள் பார்ப்பதையே நாமும் பார்ப்பது போல் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. வன்முறைக்காட்சிகளை நேரடியாகக் காட்டாமல் பின்னணியில் நடப்பது போல கேமரா (கதாப்பாத்திரங்கள்) அதை கண்டும் காணாமல் விலகிச் செல்வது போலப் படம்பிடித்திருக்கிறார்கள். போதகுறைக்கு அந்த இடமே ஒரு வித புகைமூட்டமாக இருப்பதைப் போலவே வடிவமைத்திருக்கிறார்கள். ஒருவித பதட்ட நிலையை படமே பிரபலிக்கிறது. ஒரு காட்சயில் யூதர்கள் விஷவாயுக்கூடத்தில் இடமில்லை என்பதால் பொதுவெளியில் அம்மணமாக்கப்பட்டு எரித்துக்கொல்லப்படுவார்கள். அங்கு Saul இருப்பான். அந்தக் காட்சி எடுக்கப்பட்டிருந்த விதம் அதி அற்புதம். நேரடியாகப் பார்ப்பதை விட இந்த இலைமறைவு கொடூரம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஹங்கேரியின் Budapest நகரில் 28 நாட்கள் செட் போட்டுப் படம்பிடித்திருக்கிறார்கள். போலாந்தில் உள்ள Auschwitz-Birkenau State Museum என்ற அருங்காட்சியகத்தில் வேலை செய்தவர் இந்தப் படத்தின் கலை இயக்கத்தில் பங்காற்றியிருக்கிறார். படத்தின் ஒலியமைப்பிற்கு மட்டும் 5 மாதங்கள் உழைத்திருக்கிறார்கள். படத்தில் மொத்தம் 5 மொழிகள் பேசப்படுகிறது. இசை உண்டு. ஆனால் வேண்டுமென்றே அதை மெலிதாக ஒலிக்கும்படி வடிவமைத்திருந்ததாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். சென்ற ஆண்டு நடைபெற்ற Cannes திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு Grand Prix விருது வென்றிருக்கிறது இந்தப் படம். சென்ற ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான கோல்டன் குளோப், ஆஸ்கார் விருதுகளையும் வென்றிருக்கிறது.

ஆச்சரியம் என்னவென்றால் இயக்குனர் Laszlo Nemes ற்கு இது முதல் படம். முன்பின் படமெடுத்த அனுபவமில்லையென்றாலும் (உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்), இப்படித்தான் படம் இருக்க வேண்டும் என்று Nemes பிடிவாதமாக இருந்ததால் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் பெரும் தாமதமாகியிருக்கிறது. பிரான்ஸ் தயாரிப்பாக வந்திருக்க வேண்டிய படம் பல தடைகள், சிக்கல்களுக்குப் பிறகு, Nemes இன் சொந்த நாடான ஹங்கேரி சார்பிலேயே தயாரிக்கப்பட்டு விருதுகளையும் குவித்து பெருமை தேடித் தந்திருக்கிறது. கிட்டத்தட்ட இதே ஸ்டைலில் எடுக்கப்பட்ட இவரது குறும்படமான Little Patience (2007) இணையத்தில் காணக்கிடைக்கிறது.

அவசியம் பார்த்தே தீர வேண்டிய அக்மார்க் உலகப்படம்.

பி.கு - இரண்டாம் உலகப்போரில் ஹங்கேரியின் பங்கு பற்றி வாசிக்க நேர்ந்ததில் கிடைத்த சில அதிர்ச்சிகரமான தகவல்கள். ஹிங்கேரி ஹிட்லரது தலைமையிலான அச்சுப்படைக்கு (Axis Powers) ஆதரவளித்திருக்கிறது. நாஜிக்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு யூதர்களான தனது சொந்த நாட்டு மக்கள் 4,37,000 பேரை வெறும் 8 வாரங்களுக்குள் 147 ரயில்களில் Auschwitz கூடத்திற்கு அனுப்பி கொலை செய்திருக்கிறது. இதைச் செய்தவர்கள் அனைவருமே ஹங்கேரிய அதிகாரிகளே. வெறும் 20 நாஜி அதிகாரிகள் மட்டுமே அச்சமயம் அங்கிருந்திருக்கிறார்கள். 900 Sonderkommando ஏன் தேவைப்பட்டார்கள் என்று இப்போது தெரிகிறதா? ஹங்கேரிய அதிகாரிகளின் இந்தச் செயல் அவர்களையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஹங்கேரியத் தலைவரான Miklos Horthy ஹிட்லருடன் நட்புறவாடிக்கொண்டே, நேசப்படைகளுடன் ரகசியமாக தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் போட்டு, அதை ஹிட்லர் கண்டுபிடித்து, ஹங்கேரி மீது நாஜிக்கள் படையெடுப்பு நடத்தி, நாட்டையே நாசக்காடாக்கிக் கைப்பற்றி, கடைசியில் நேசப்படைகளிடம் வீழ்ந்து - சுமார் 9,00,000 ஹங்கேரியர்களைக் காவு வாங்கியிருக்கிறது இரண்டாம் உலகப்போர்.

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

**************************

Sonderkommando - The Nazi forces forced a group of Camp prisoners, usually Jews to do their dirty work in the Concentration Camps. They were called Sonderkommando. These prisoners did not participate in the killing but were forced to dispose corpses, separate valuables from the dead's belongings and scrub the floors immediately and keep it ready for the next batch. Considered the most complicated and sensitive topic in within the Holocaust, Hungarian movie 'Son of Saul' happens during October 1944 in the infamous German Concentration Camp Auschwitz, in Poland. Story is about a Sonderkommando Saul Auslander, a Hungarian-Jew who tries to find a Rabbi (Jew Scholar) to give a proper jewish burial to a dead boy whom he thinks is his son.

Dir. Laszlo Nemes
Directed by the Hungarian Director, Laszlo Nemes as his debut film, Son of Saul has won the Grand Prix in Cannes and also the Best Foreign Film awards in the Golden Globe and Oscars. Shot in just 28 days in Budapest, the whole movie is shot using a 40 mm lens which gives a intentional portrait-like narrow image. The whole set is kind of smoky and the camera always follows the protagonist closely, very closely and we as audience see only what he sees. By this way, the director has successfully conveyed the horrors of Auschwitz without showing it in detail. Everything is happening in the background and we are horrified enough just by glimpses of it from the background. 

A Must Watch Epic!

Trailer -
Download Link -



Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...