Lebanon | Israel | 2009

12:04:00 PM



1982 ஆம் ஆண்டு ஜூன் மாதம், முதல் லெபனான் போர் நடந்து கொண்டிருக்கும் சமயம்; ஓற்றை பீரங்கி டாங்க் ஒன்று 4 வீரர்களைச் சுமந்து கொண்டு ஏற்கனவே இஸ்ரேல் விமானப் படையினரால் தரைமட்டமாக்கப்பட்ட லெபனானுக்கு உட்பட்ட இடத்தில் ஊர்ந்தபடி சென்று கொண்டிருக்கிறது. அவர்களது பணி இன்னும் ஏதேனும் அந்த ஊரில் மிச்சமிருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். அதாவது கிளர்ச்சியாளர்களாக இருந்தால் கொல்ல வேண்டும், பொதுமக்களாக இருந்தால் விரட்ட வேண்டும். 

அந்த நான்கு வீரர்களுக்கு வயது 20க்கு கொஞ்சம் அதிகமிருக்கும். ஒரு கமாண்டர், ஒரு டிரைவர், ஒரு லோடர் (Loader) மற்றும் புதிதாக அப்பொழுதான் வந்திறங்கும் ஒரு ஷூட்டர் (Shooter / Gunner). இவர்களுக்கு நடக்கும் உரையாடல்கள், டாங்கிற்கு வெளியே இருந்து வரும் உத்தரவுகள், உத்தரவிற்கு இவர்களது செய்கைகள் இவை தான் மொத்தப் படமும். 

90 நிமிடங்கள் ஓடும் இந்த மொத்தப் படமும் அந்த ஆர்மி பீரங்கி டாங்கிற்குள்ளேயே எடுக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பக் காட்சியில் பீரங்கியைக் காட்டுகிறார்கள், இறுதிக்காட்சியில் மறுபடியும் பீரங்கியைக் காட்டுகிறார்கள். இவை இரண்டும் தான் வெளிப்புறக் காட்சிகள் (Outdoor). மற்ற காட்சிகள் அனைத்துமே பீரங்கிக்குள் நடப்பதாகவோ அல்லது பீரங்கியின் gunsight வழியாக பீரங்கியின் ஷூட்டர் வெளியே பார்க்கும் காட்சிகளாகவும் காட்டப்படுகிறது. படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது இந்த காட்சியமைப்புகளும் ஒளிப்பதிவுதான்.

போர் இந்த இரண்டெழுத்து வார்த்தை பலரது தலையெழுத்தை மாற்றும் சக்தி கொண்டது. நம் காலுக்கடியில் இருக்கும் இலங்கை நம்முடன் பிறந்த நமது சகோதர-சகோதரிகளைக் கொன்று குவித்தனர். அந்த இறுதிப் போரில் தலைவனுடன் சேர்த்து பாதித் தமிழினம் உயிரிழந்து விட்டது. அதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்ததால் மீதித் தமிழினமான நாம் உயிர் இருந்தும் பிணம்தான். முதல் உயிர் கொல்லப்பட்ட போதே முழு பலத்துடன் பதிலளித்திருந்தால் இப்போது யாழ்பாணத்தில் கொல்ல ஆள் கிடைக்காமல் இராமேஸ்வரத்திற்கு வந்து நிற்கமாட்டார்கள். சுண்டெலி யானையை பார்த்து காரி உமிழ்ந்து கைகொட்டி சிரிக்கிறது சிரிக்கிறது. நாம் மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். என்ன செய்ய... வக்கற்றுப் போய் புலம்பத்தான் என்னால் முடிகிறது.

 இதே போன்றதொறு போரில் நடந்த சம்பவங்களின் கோர்வையே இந்த இஸ்ரேலியப் படமான லெபனான். இந்தப் படத்தின் இயக்குனர் Samuel Maoz. ஒரு முன்னாள் இஸ்ரேல் ராணுவ வீரர். இதே போரில் ஒரு பீரங்கியின் ஷூட்டராக இருந்தவர். 24 ஆண்டுகள் கழித்து தான் இவரால் தான் அனுபவித்தவற்றை ஒரு முழுமையான் திரைக்கதையாக எழுத முடிந்திருக்கிறது. இந்தக் கதையை எழுதும் போதும் பழைய நினைவுகளால் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார் இயக்குனர். போர் நடக்கும் போது இருக்கும் தாக்கத்தைவிட போர் முடிந்த பிறகு அதில் ஈடுபட்டவர்கள் மனோரீதியாக அனுபவிக்கும் கொடுமைகள் தான் அதிகமென்பது புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுவரை போர் அனுபவம் சிறிதுமில்லாத நான்கு இளம்வீரர்களுடன் நாமும் அந்த பீரங்கி டாங்குடன் பயணம் செய்யும்படி படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். 

அழுக்கு, புளுக்கம், எண்ணைக் கசிவு, வியர்வை நாற்றம், உயிர் பயம், கோபம் என்று அந்த பீரங்கியில் இருக்கும் வீரர்கள் அனுபவிக்கும் அனைத்தையும் படம் பார்க்கும் நாமும் அனுபவிக்கிறோம்.

படத்தின் கதையைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் இந்தப் படம் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று என்பதை மட்டும் தெளிவாக, அழுத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன்.

போன இரண்டு படங்களைப் போலவே இந்தப் படத்தையும் எனக்குக் காட்டி என்னை பாக்கியவானாக்கிய நான்காவது பெங்களூரூ உலகத்திரைப்பட விழாவிற்கு என் மனமார்ந்த நன்றி.  

You Might Also Like

3 comments

  1. நிறைய நிறையப் படங்கள் ஏற்கனவே பார்க்க எடுத்து வைத்திருக்கிறேன். நேரம் கிடைத்தவுடன் கட்டாயம் பார்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  2. //மீதித் தமிழினமான நாம் உயிர் இருந்தும் பிணம்தான்.//

    சாட்டையடி வரிகள்....

    ReplyDelete
  3. Lebanon: படத்தை இப்ப தான் கேள்விபடுறேன். போரின் வலியை பதிவு செய்த படம் போல் தெரிகிறது.
    கொடுரமான காட்சிகள் இல்லை என்று நினைக்கிறேன். கண்டிப்பா பார்த்து விட்டு என் கருத்தை சொல்கிறேன்.
    இலங்கை போர் பற்றிய உங்கள் பார்வையே எனதும்.
    கண் கெட்ட பிறகு இபொழுது சூர்ய நமஸ்காரம் செய்கிறோம்.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...